ஈரோடு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
|திம்பம் மலைப்பாதை
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.
தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக திம்பம் மலைப்பாதை உள்ளதால், தினமும் இந்த மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இந்த மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
லாரி கவிழ்ந்தது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு சூரியகாந்தி பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி நேற்று காலை 7 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 17-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு பகல் 11 மணி அளவில் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து தொடங்கியது. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.