வேலூர்
மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து
|பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரணாம்பட்டு
குஜராத் மாநிலத்திலிருந்து குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
லாரியை தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த குமரவேல்(வயது 36) ஓட்டி வந்தார். கிளீனராக குமரேசன் (40) இருந்தார். அந்த லாரி பேரணாம்பட்டு அருகே பத்தலப் பல்லி மலைப்பாதை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தது.
மலைப்பாதையின் முதல் வளைவில் வந்த போது வேகத்தை குறைப்பதற்காக டிரைவர் குமரவேல் முயன்றார்.
ஆனால் பிரேக் பிடிக்கவில்லை. இந்த நிலையில் வலதுபுறத்தில் இருந்த மலைப் பகுதி முகட்டில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் குமரவேல், கிளீனர் குமரேசன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தின் இடதுபுறம் 200 அடி பள்ளம் இருந்தது. டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டு வலதுபுறம் வந்தபோது லாரி சாலையிலேயே கவிழ்ந்ததால் பெரிய விபத்திலிருந்து தப்பியது.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.