செங்கல்பட்டு
கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
|மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், பல்லவன் சிலை உள்ளிட்ட பல இடங்களில் உயர்மட்ட பாலங்கள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மணல் குவித்து சாலையை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாமல்லபுரத்தை அடுத்த பெருமாளேரி கிராமத்தில் உள்ள ஏரிகளில் இருந்து லாரிகளில் செம்மண் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்லவன் சிலை அருகில் உயர்மட்ட பாலம் பகுதியில் மண் நிரப்புவதற்காக ஒரு லாரியில் ஏரி மண் எடுத்து செல்லப்பட்டது. அந்த லாரி திடீரென மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரி எதிரே நிலைதடுமாறி கவிழ்ந்தது. லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அப்போது லாரியில் இருந்து மண் சாலையில் கொட்டியதால் சென்னை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த டிப்பர் லாரி நிமிர்த்தப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் குவிந்து கிடந்த மண் குவியல் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
பின்னர் வழக்கம்போல போக்குவரத்து தொடங்கியது.