< Back
மாநில செய்திகள்
கனகம்மாசத்திரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளிகள் 2 பேர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கனகம்மாசத்திரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளிகள் 2 பேர் பலி

தினத்தந்தி
|
11 Sept 2023 2:24 PM IST

கனகம்மாசத்திரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி காவலாளிகள் 2 பேர் பலியாயினர்.

கல்லூரி காவலாளிகள்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 36). இவரது நண்பர் பழனி (44). இவர்கள் இருவரும் திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இருவரும் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்ட, பின் இருக்கையில் பழனி உட்கார்ந்து கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து ராமஞ்சேரி அடுத்த புதூர் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது, முன்னே சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

இதனால் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செந்தில் குமார் மற்றும் பழனி ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பழனிக்கு கீதா(29) என்ற மனைவியும், 5 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்