செங்கல்பட்டு
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; செல்போன் கம்பெனி ஊழியர் பலி
|திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் செல்போன் கம்பெனி ஊழியர் பலியானார்.
திருச்செந்தூர் கோவிலுக்கு...
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விஜய் (வயது 26), இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வழிபாடு செய்வதற்காக நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இதற்கிடையே முருகன் கோவில் பிரசாதத்தை மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
விபத்தில் பலி
அப்போது மாமல்லபுரம் அருகே எச்சூர் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி ஒன்று விஜய் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பலியான விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.