சென்னை
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3½ வயது குழந்தை பலி
|லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3½ வயது குழந்தை பலியானது.
சோமங்கலம்,
சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (வயது 35). இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் மேலகருப்பூர் அஞ்சல் மொய்யூர் கிராமம். உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வினோதா. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். மகன்கள் நித்தின் (6), ருத்ரேஷ் (3½). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், இந்தி நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்றனர்.
இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கன்னடபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தர்காஸ் சாலை பகுதியில் வரும்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இவர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
லாரி மோதியதில் ருத்ரேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் மற்றும் நித்தின் ஆகியோர் காயத்துடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜவான் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது குழந்தை லாரி மோதி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.