< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; போலீஸ்காரர்-வக்கீல் பலிடிரைவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; போலீஸ்காரர்-வக்கீல் பலிடிரைவர் கைது

தினத்தந்தி
|
2 Aug 2023 12:53 PM IST

மணலி விரைவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் போலீஸ்காரர் மற்றும் வக்கீல் பலியானார்கள்.

திருவொற்றியூர்,

எண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தவர் கணபதி (வயது 36). இவர் மணலியில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி கோர்ட்டு பணிகளை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இவர் நேற்றுமுன்தினம் இரவு பணி முடித்து தனது நண்பரான திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த வக்கீல் மதிவாணன் (32) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை வக்கீல் மதிவாணன் ஓட்டினார். இதையடுத்து, மணலி விரைவு சாலையில் சத்தியமூர்த்தி நகர் அருகே பக்கிங்காம் கால்வாயை இருவரும் கடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் போலீஸ்காரர் கணபதியும், வக்கீல் மதிவாணனும் தூக்கி வீசப்பட்டதில் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்கு காரணமான சிதம்பரத்தை சேர்ந்த வாரி டிரைவரான ராஜி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பலியான போலீஸ்காரர் கணபதிக்கு பிரேமலதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் மதுரையில் வசித்து வருகிறார்கள். போலீஸ் குடியிருப்பில் கணபதி மட்டும் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

மதிவாணணுக்கு திருமணமாகி 1 வருடமே ஆன நிலையில், இவரது மனைவி மருநாயி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். திருமணமான ஒரு வருடத்தில் வக்கீல் மதிவாணன் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்