திருவள்ளூர்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி - கிராம மக்கள் சாலை மறியல்
|மினி லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி விஜயா (வயது48). இவர் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தினக்கூலி வேலை முடித்து விட்டு தனது மகன் வேலு (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அதே திசையில் வந்த மினி லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். மகன் வேலு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
லாரி டிரைவர் லாரியை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு தப்பினார். இந்த நிலையில் டிரைவரை கைது செய்ய கோரி சிறுபுழல்பேட்டை கிராமமக்கள் சம்பவ இடத்தில் விஜயாவின் உடலுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அங்கு சென்று விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கீமலூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வினோத், அதே கிராமத்தைச்சேர்ந்த தனது நண்பர் சிற்றரசு (24) என்பவருடன் மாதர்பாக்கத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாதர்பாக்கம் என்.எஸ்.நகர் அருகே செல்லும் போது ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் பின்னால் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வினோத் படுகாயம் அடைந்த நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் நண்பர் சிற்றரசு லேசான காயம் அடைந்த நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.