காஞ்சிபுரம்
கணவரை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி
|காஞ்சீபுரத்தில் கணவரை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த போது, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருக்கு பரமேஸ்வரி (வயது 37) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு ஆறுமுகம் நேற்று அதிகாலை காஞ்சீபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த நிலையில், அவரை அழைத்து செல்ல மனைவி பரமேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் அன்னை இந்திரா காந்தி சாலை வழியாக வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பரமேஸ்வரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து விபத்து குறித்து தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரமேஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (37) என்பவரை கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.