< Back
மாநில செய்திகள்
மேல்மருவத்தூர் அருகே வேன் மீது லாரி மோதல்: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த 2 பேர் பலி
மாநில செய்திகள்

மேல்மருவத்தூர் அருகே வேன் மீது லாரி மோதல்: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த 2 பேர் பலி

தினத்தந்தி
|
11 July 2022 9:46 PM GMT

மேல்மருவத்தூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த 2 பேர் பலியானார்கள்.

மதுராந்தகம்,

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு வந்தனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கத்தில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி வேன் சென்று கொண்டு இருந்தது.

அப்போது எதிர்திசையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி முன்னே சென்று கொண்டு இருந்த ஆம்னி பஸ் மீது உரசி சாலையில் நடுவில் உள்ள தடுப்பை தாண்டி மறுபக்க சாலைக்கு பாய்ந்து எதிரே அ.தி.மு.க. தொண்டர்கள் வந்த வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

2 பேர் சாவு

இதில் வேன், லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொருங்கியது. இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சாலவேட்டையை சேர்ந்த வேன் டிரைவர் அண்ணாமலை (வயது 34), அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் (40) உள்பட 7-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் லாரி டிரைவர், அவருடன் லாரியில் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவலறிந்தமேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 16 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வேன் டிரைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்