நாமக்கல்
டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி
|பரமத்திவேலூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
டிரைவர்
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா, சார்க்கான் பகுதியை சேர்ந்தவர் பிரகலாத்சிங். இவரது மகன் சேட்டு (வயது 21). இவர் நேற்று புதிய பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்றை டெலிவரி செய்வதற்காக சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்ல நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் புதிய டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி ஒன்று டிராக்டர் மீது மோதியுள்ளது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த சேட்டு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
விசாரணை
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் சேட்டுவின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.