திருவள்ளூர்
கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தொழிலாளி பலி
|கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
லாரி மோதல்
திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48). இவர் கூலிக்கு மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலை நிமிர்த்தமாக கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்றுவிட்டு, கனகம்மாசத்திரம்- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முத்துக்கொண்டாபுரத்தில் கொசஸ்தலையாற்று உயர்மட்ட பாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி நாகராஜன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது
தொழிலாளி பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நாகராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து நாகராஜின் மகன் நரேஷ் அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி கூலி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த நாகராஜிக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.