< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் உடல் நசுங்கி பலி
திருச்சி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் உடல் நசுங்கி பலி

தினத்தந்தி
|
23 Sept 2023 1:44 AM IST

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஜீயபுரம்:

மளிகைக்கடைக்காரர்

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை வைகோ நகரை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 42). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி முனீஸ்வரி(35). இவர்களுடைய மகள் தர்ஷினி(9), மகன் குருசரண்(7). இதில் தர்ஷினி திருப்பராய்த்துறை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பும், அதே பள்ளியில் குருசரண் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

மூர்த்தி வாரந்தோறும் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று அவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் மதியம் முனீஸ்வரியை மளிகைக்கடையை கவனித்துக்கொள்ள கூறிவிட்டு, தனது குழந்தைகளுடன் மூர்த்தி சிங்கப்பெருமாள் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

லாரி மோதியது

அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், அவர் குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அல்லூர் சுடுகாடு அருகே வந்தபோது, பின்னால் சென்னையில் இருந்து கோவைக்கு இரும்பு உருளைகளை ஏற்றிச்சென்ற கனரக லாரி, மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முயன்றது.அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கியது. மேலும் நிலைதடுமாறி விழுந்த 3 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

3 பேர் சாவு

இதில் மூர்த்தி, குருசரண் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் தர்ஷினிக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, தலைமுடியுடன் கூடிய பகுதி பிய்த்து எறியப்பட்டு மூளை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக இறந்தார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் கோர விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இந்த விபத்தால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உத்தரபிரதேசம் மாநிலம் ஜோத்பூர் மிங்குறி நாத்தூரி பகுதியை சேர்ந்த உமாசங்கரை(40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்