சேலம்
சரக்கு வேன் மீது லாரி மோதல்; டிரைவர் சாவு
|சேலத்தில் இரவில் சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூரில் இருந்து நேற்று இரவு 11 மணிக்கு சேலம் நோக்கி ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, மாமாங்கம் பகுதியில் அந்த வேன் வந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி திடீரென மோதியது. இதனால் நிலை தடுமாறிய அந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனின் முன்பகுதி கடுமையான சேதமானது. மேலும், சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் அந்த லாரி மோதி நின்றது. இந்த விபத்தில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர், இடிபாடுக்குள் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்துவிட்டதாகவும். மேலும், வேனில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் மற்றும் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த டிரைவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி-வேன் மோதிய விபத்தால் சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.