செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பலி
|மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் கார் விபத்திற்குள்ளானது.
சென்னை,
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி கார் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதி மற்றும் சிறுவன் சச்சின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் 5 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.