< Back
மாநில செய்திகள்
கார் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
மாநில செய்திகள்

கார் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

தினத்தந்தி
|
4 Jan 2023 12:24 AM GMT

கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

கடலூர்,

மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் விஜயராகவன் (வயது 41). இவரது மனைவி வத்சலா (36). இந்த தம்பதிக்கு விஷ்ணு (9), அதீர்த் (6) ஆகிய 2 மகன்கள் இ்ருந்தனர். விஜயராகவனும், வத்சலாவும் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் நங்கநல்லூர் இந்து காலனியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்தலட்சுமியும் (60) இருந்தார்.

இவர்கள் 5 பேரும் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை விஜயராகவன் ஓட்டினார்.

அப்பளம் போல் நொறுங்கிய கார்

இந்த கார் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார்பாளையம் மஞ்சையப்பர் கோவில் அருகில் வந்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் விஜயராகவன், தனது காரை முன்னால் நின்ற லாரிக்கு பின் பகுதியில் நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் முன்னால் நின்ற லாரி மீது கார் மோதியது. 2 லாரிகளுக்கு இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. தொடர்ந்து அந்த லாரி அடுத்தடுத்து முன்னால் நின்ற கார் மற்றும் தனியார் பஸ் மீதும் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

5 பேர் பலி

இந்த விபத்தில் காரில் வந்த விஜயராகவன் உள்பட 5 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடுபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 5 பேர் உடல்களையும் மீட்டனர்.

பின்னர் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தெலுங்கானாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (21) என்பவரை கைது செய்தனர்.

இந்த விபத்து நடந்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்