திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே லாரி - கார் மோதல்; பெண் உள்பட 3 பேர் படுகாயம்
|பெரியபாளையம் அருகே லாரி- கார் மோதி கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
லாரி - கார் மோதல்
பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. நேற்று இந்த கம்பெனிக்கு சென்னையில் இருந்து ஆயில் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி வந்தது. பெரியபாளையம் - சென்னை நெடுஞ்சாலையில் பானப்பாக்கம் கிராமத்திற்கு வந்தபோது கம்பெனிக்கு செல்வதற்காக டிரைவர் லாரியை திருப்பினார். அப்போது அதே திசையில் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கி லாரி சக்கரத்தில் சிக்கியது. காரில் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
3 பேர் படுகாயம்
விபத்து குறித்து பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற லட்சுமி நாராயணன் (வயது 46), பெரிய வண்ணங்குப்பம் கிராமத்தை சோ்ந்த பானுமதி (35), முக்கரம்பாக்கம் ஊராட்சி, மாம்பேடு கிராமத்தை சேர்ந்த ஜான்சன் (46) ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.