< Back
மாநில செய்திகள்
லாரி, கார் நேருக்கு நேர் மோதல்:  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி  மேல்மலையனூர் அருகே சோகம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

லாரி, கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி மேல்மலையனூர் அருகே சோகம்

தினத்தந்தி
|
30 Aug 2022 10:13 PM IST

மேல்மலையனூர் அருகே லாரி, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

மேல்மலையனூா்,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா கிராம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜேந்திரன் (வயது 60). அதே பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார்.

இவர் தனது மனைவி சாந்தி (55), மகன் அழகுவேல்ராஜன் (25), உறவினர் சகுந்தலா தேவி ஆகியோருடன் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். காரை அழகுவேல்ராஜன் ஓட்டினார்.

3 பேர் பலி

நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே ஐதராபாத்தில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற லாரியும், இந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாட்டுக்குள் சிக்கிய முத்துராஜேந்திரன், சாந்தி, அழகுவேல் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த சகுந்தலா தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

விபத்து பற்றி அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்