பெரம்பலூர்
பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்
|பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் நகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்வா நிதியில் தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 10 பேருக்கும், பூக்கடை வியாபாரிகள் 3 பேருக்கும், டிபன் கடை வியாபாரிகள் 2 பேருக்கும் தள்ளுவண்டிகளை வழங்கினார். இதில் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகரமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், இளநிலை உதவியாளர் பார்த்திபன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் இந்தியன் ஸ்வச்லீக்-2023 2.0 திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி சார்பில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிடும் வகையில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல் குறித்தும், கழிவுநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.