போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது
|தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சென்னை,
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி நிபந்தனையுடன் ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக சென்னை கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி, சென்னை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.