< Back
மாநில செய்திகள்
சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து முத்தரப்பு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து முத்தரப்பு கூட்டம்

தினத்தந்தி
|
15 Sep 2022 6:34 PM GMT

திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றுவது தொடர்பான முத்தரப்பு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றுவது தொடர்பான முத்தரப்பு கூட்டம் நடந்தது.

முத்தரப்பு கூட்டம்

திருவண்ணாமலை- வேலூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 8-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது சமரச பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் அபிராமன், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அலுவலர் கார்த்திகேயன், சக்திவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியால் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி தரப்பில் வலியுறுத்தினர்.

அதிகாரம் இல்லை

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், கடந்த 2019-ம் ஆண்டு இந்த நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பான அனுமதியை மாநில அரசிடம் இருந்து பெற்று இருக்கிறோம். இதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளது. நகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இந்த சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. மேலும் 2 சுங்கச்சாவடிகளுக்கு இடையே 60 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் 57 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டனர். ஆனால் இது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள், கருத்துகளை அறிக்கையாக தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்