< Back
மாநில செய்திகள்
முத்தரப்பு கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

முத்தரப்பு கூட்டம்

தினத்தந்தி
|
7 Oct 2022 8:23 PM GMT

கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு 2016-18-ம் ஆண்டுகள் வரை விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஊக்கத் தொகையை வட்டியுடன் புதிய நிர்வாகம் வழங்க வேண்டும். எங்களுக்கே தெரியாமல் பல வங்கிகளில் எங்களது பெயரில் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்களது பெயரில் கடன் தொகை இருப்பதால் வேறு எந்த கடனும் வாங்க முடியவில்லை. எனவே கடன் இல்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும். எங்கள் பெயரில் உள்ள சிவில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

ஒரே தவணை

கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டபிறகு புதிய நிர்வாகம் ஆலை பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும். இனிமேல் கரும்பு அரவை செய்தால் 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். கையெழுத்து போட்டால் தான் முழு தொகையையும் தருவோம் என ஆலை நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் நடேசன் கூறும்போது, 7 ஆயிரத்து 452 விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டியதில் இதுவரை 2 ஆயிரத்து 465 விவசாயிகளுக்கு முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது. 2-வது தவணை தீபாவளி பண்டிகைக்குள் வழங்கப்படும்.

வெட்டுக்கூலி

2014-18-ம் ஆண்டுகளில் ஊக்கத் தொகை வழங்க வேண்டிய 5 ஆயிரத்து 47 விவசாயிகளில் 2 ஆயிரத்து170 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டியதற்கான வெட்டுக்கூலி, போக்குவரத்து வாடகை பாக்கி, கரும்புக்கான நிலுவைத் தொகை ஆகியவை முழுமையாக வழங்கப்படும் என்றார்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, வங்கிக் கடன் தொடர்பாக தீர்வு காண விவசாயிகள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து அதில் 7 பேர் கொண்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கியினர் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை விவசாயிகளுக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்றார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜஸ்டின், கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் முனுசாமி, தலைமை நிதி அலுவலர் மணிகண்டன், கரும்பு உற்பத்தி ஆலோசகர் கந்தசாமி மற்றும் வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்