கன்னியாகுமரி
பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மும்மத பிரார்த்தனை, சமபந்தி விருந்து
|பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மும்மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து வருகிற 19-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
களியக்காவிளை,
பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மும்மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து வருகிற 19-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
நோய் நீங்கியது
பள்ளியாடியில் 450 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் பரவிய கொடிய நோயால் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நோய் தீர்த்தல் பள்ளியப்பனுக்கு கஞ்சிதர்மம் செய்வதாக வேண்டிக் கொண்டனர். பள்ளியப்பாவின் அருளால் நோய் நீங்கி நலம் பெற்றதால் மக்கள் வேண்டுதலை நிறைவேற்ற பள்ளியப்பா திருத்தலத்தில் கஞ்சி தர்மம் செய்தனர். இதையடுத்து தொன்றுதொட்டு நடைபெற்று வந்த கஞ்சி தர்மம் நாளடைவில் சமபந்தி விருந்தாக பிரபலமடைந்து உள்ளது.
மும்மத பிரார்த்தனை தலம்
இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரத்தின் அருகில் விளக்கு அமைந்துள்ளனர். இந்த திருவிளக்கில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என மும்மத அடையாளங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வ மத திருத்தலத்தில் இந்துகள் விளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியும், முஸ்லிம்கள் தூபம் காட்டியும் அவரவர் முறைப்படி வணங்குகின்றனர். மும்மத பிரார்த்தனை தலமாகவும் சமய நல்லிணக்க தலமாகவும் திகழும் இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை சர்வமத பிரார்த்தனையும், மறுநாள் திங்கட்கிழமை மாபெரும் சமபந்தி விருந்தும் நடைபெற்று வருகிறது. சர்வமத பிரார்த்தனையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என அனைத்து மத குருமார்களும் கலந்து கொள்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதால் மதம், இனம், மொழி பாகுபாடின்றி இந்த திருத்தலத்தில் செலுத்தும் காணிக்கை உணவு பொருள்களை சேமித்து வைத்து சமையல் செய்து இங்கு வரும் மக்களுக்கு சமபந்தி விருந்தாக வழங்கப்பட்டு வருகிறது.
19-ந்தேதி...
இந்த ஆண்டு வருகிற 19-ந்தேதியான 3-வது ஞாயிற்றுக்கிழமை சர்வமத பிரார்த்தனையும், 20-ந்தேதி திங்கட்கிழமை சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.
சமபந்தி விருந்து மற்றும் சர்வமத பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளை பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் டாக்டர் குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ், செயலாளர்கள் சசிகுமாா், மணிகண்டன் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.