போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர்
|போக்குவரத்து தொழிலாளர்களின் 6-அம்ச கோரிக்கைகளில் ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கடலூர்,
மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் நடந்த கலவர வழக்கு தொடா்பாக கடலூர் கோர்ட்டில் நேற்று ஆஜராகிவிட்டு வெளியே வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 19-ந் தேதி (இன்று) சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பஸ்களில் பயணிக்க ஒரு லட்சம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் அரசு பஸ்களில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு முதல் தென்மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னையை நோக்கி மக்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் இன்னும் 2 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதாவது ஒரு நாளைக்கு ஆயிரம் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்களின் வசதிக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படுகிற பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விரைவில் சிறப்பு கூட்டம் நடத்தி, இம்மாத இறுதிக்குள் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளிலும் ஓய்வுபெற்றவர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.இதில் நிதிச்சுமையை கணக்கிட்டு தான், கோரிக்கையை நிறைவேற்ற அரசு முடிவு எடுக்கும். போக்குவரத்து தொழிலாளர்களின் 6-அம்ச கோரிக்கைகளில் ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.