< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

முக்கடல் அணை நிரம்பியது

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

தொடர் மழை காரணமாக நாகர்கோவிலுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நிரம்பியது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதனால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதே போல நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கடல் அணையிலும் தண்ணீர் தரைமட்டத்துக்கு போனதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் புத்துயிர் அளிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் முதல் மழை பெய்ய தொடங்கியது. அதிலும் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கன மழை பெய்கிறது. இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. அதைத் தொடர்ந்து அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிறையும் தருவாயில் உள்ளன.

ஆனால் இதற்கு ஒரு படி மேலே சென்று முக்கடல் அணை நிரம்பியுள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. அதே சமயம் தொடர் மழை பொழிவு காரணமாக அணைக்கு வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பி விட்டதால் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதை மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் உள்பட பலர் இருந்தனர்.

முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நாகர்கோவில் மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்