< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், பீடிஇலை, கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதனால் கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மினி லாரி

நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் புதூர்பாண்டியாபுரம் பாலம் அருகே வாகன ேசாதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் வழிமறித்தனர். ஆனால், மினி லாரி நிற்காமல் வேகமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பி சென்றது. இதனால் போலீசார் ஜீப்பில், மினி லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கினர். அப்போது, அதில் இருந்து கீழே இறங்கி டிரைவர், கிளீனர் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர்.

பீடி இலைகள்

தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனை செய்தனர். அதில் சுமார் 40 மூட்டைகள் இருந்தன. அதை திறந்து பார்த்தபோது 1,200 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. சிக்கிய பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் போலீசார், பீடி இலை மூட்டை மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ஆத்தூர் அடுத்த பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளி கடற்கரை பகுதியில் ஒரு லோடு ஆட்டோவில் மூட்டைகளுடன் சிலர் வந்தனர். போலீசாரை பார்த்ததும் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். போலீசார், அந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது, ஏராளமான பண்டல்களில் 1,200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இலங்கைக்கு கடத்த முயன்ற இதன் மதிப்பும் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பீடி இலை பண்டல்கள், லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த 2 சம்பவங்களிலும் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்