< Back
மாநில செய்திகள்
திருச்சி ரெயில்வே கோட்டம் சரக்கு ஏற்றுமதியில் ரூ.810 கோடி வருவாய் ஈட்டி சாதனை
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி ரெயில்வே கோட்டம் சரக்கு ஏற்றுமதியில் ரூ.810 கோடி வருவாய் ஈட்டி சாதனை

தினத்தந்தி
|
18 Sept 2023 3:03 AM IST

திருச்சி ரெயில்வே கோட்டம் சரக்கு ஏற்றுமதியில் ரூ.810 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்தது.

ரூ.810 கோடி வருவாய்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில்களில் சரக்கு ஏற்றும் வாடிக்கையாளர்களுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். முதன்மை கோட்ட வணிக மேலாளர் செந்தில் குமார், முதன்மை கோட்ட செயல்பாட்டு மேலாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சரக்கு ஏற்றுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நடப்பு நிதி ஆண்டில் ரெயில்வே வாரியம் மீதமுள்ள நாட்களில் ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2022-23 நிதியாண்டில் 13.52 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்து ரூ.810 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு சரக்கு போக்குவரத்தில் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் திருச்சி கோட்டத்திற்கு ரெயில்வே வாரியம் 15 மில்லியன் டன்கள் ஏற்றுதல் இலக்கு மற்றும் ரூ.907 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த மாதம் வரை திருச்சி ரெயில்வே கோட்டம் 5.70 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்து ரூ.322 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உணவு தானியங்கள்

மேலும் இந்த கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் தரப்பில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நிலக்கரி, இரும்புத்தாது, உரம் உள்பட மொத்தம் 8.808 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று உறுதியளித்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உணவு தானியங்களை கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்தது போல் இந்த ஆண்டும் 3 மில்லியன் டன் ஏற்றுமதி செய்வதாக உறுதியளித்தது. கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களின் பிரதிநிதிகள், ரெயில்வே தரப்பில் அனைத்து கிளை அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்