திருச்சி: காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் பதற்றம் - போலீஸ் விசாரணை
|காப்பகத்தில் உள்ள 8 குழந்தைகளுக்கு இன்று திடீரென வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள மாம்பழச்சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள 8 குழந்தைகளுக்கு இன்று திடீரென வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த காப்பகத்தின் நிர்வாகத்தினர், உடனடியாக அந்த குழந்தைகளை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குழந்தைகளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால், உணவு ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.