< Back
மாநில செய்திகள்
திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம்

தினத்தந்தி
|
2 Oct 2022 12:15 AM IST

தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோவை மார்க்கமாக வரும் பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி- காரைக்கால் பயணிகள் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கோவை மார்க்கமாக வரும் பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி- காரைக்கால் பயணிகள் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா தலம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா பேராலயம், நாகூரில் ஆண்டவர் தர்கா, சிக்கலில் சிங்காரவேலர் கோவில் ஆகிய மும்மத ஆலயங்கள் அமைந்த ஆன்மிக சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

இதனால் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் நாகை மாவட்டத்துக்கு ரெயிலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்

அந்த வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலானோர் (வண்டி எண்:12084) ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களில் நின்று மயிலாடுதுறைக்கு செல்லும்.

பயணிகள் சிரமம்

இந்த ரெயிலில் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இறங்கி மாலை 6 மணி வரை காத்திருந்து வேறு ரெயிலில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இல்லையென்றால் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் நாகை, திருநள்ளாறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

நேர அட்டவணை மாற்றம்

ஜனசதாப்தி ரெயிலில் காலை 11.50 மணிக்கு தஞ்சைக்கு வரும் பயணிகள் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், தஞ்சையில் இருந்து காலை 11.40-க்கு இயக்கப்படும் திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலின் நேர(வண்டி எண்: 06880) அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தென்னக ரெயில்வே நிர்வாகம் திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் புறப்படும் நேர அட்டவணையை மாற்றி அறிவித்துள்ளது.

பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

பழைய அட்டவணைப்படி திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் காரைக்கால் பயணிகள் ரெயில் தஞ்சைக்கு காலை 11.40 மணிக்கு வந்து சேரும். தற்போது நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேரும். பின்னர் தஞ்சையில் இருந்து 12.05 மணிக்கு புறப்படும்.

இந்த புதிய அட்டவணை மூலம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் பயணிகள் தஞ்சைக்கு காலை 11.50 மணிக்கு வந்து வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலில் ஏறி சிரமமின்றி செல்லலாம். இது கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

பயணிகள் மகிழ்ச்சி

திருச்சி-காரைக்கால் பயணிகள் ெரயிலின் நேர அட்டவணையை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருச்சி-காரைக்கால் ரெயில் நேரத்தை மாற்றி அமைத்த தென்னக ரெயில்வேக்கும், பயணிகளின் நலன் கருதி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்