திருச்சி: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
|மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
திருச்சி,
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து, திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென முன்னால் சென்றுகொண்டிருந்த மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்களும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான அரசு பேருந்தையும், லாரியையும் கிரேன் மூலம் மீட்டு போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.