< Back
மாநில செய்திகள்
சீதாராம் யெச்சூரிக்கு புகழ்வணக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

சீதாராம் யெச்சூரிக்கு புகழ்வணக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
15 Sept 2024 1:50 PM IST

மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தானமாக அளிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரிக்குப் புகழ்வணக்கம்! செவ்வணக்கம்!

மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட அவரது புகழ் - அவரது மக்கள் தொண்டைப் போல் எப்போதும் போற்றப்படும்!" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சென்று அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்