இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் - சீமான் சமூக வலைதளத்தில் அஞ்சலி
|இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்காக வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்ட போராளி..! லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த புரட்சியாளர்..!
அடித்தட்டு மக்கள் தங்கள் வருமானத்தையும், தன்மானத்தையும் இழப்பதற்குக் காரணமான மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்; அதிக கலால் வரிக்கு ஆசைப்பட்டு அரசு அதனை அனுமதிப்பதால் உழைக்கும் மக்களின் பணம் உறிஞ்சப்படுகிறது. குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929 அன்றே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய பெருந்தகை..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவியபோது நாம் இந்துக்களே இல்லை எனும்போது, பின் எதற்காக மதம் மாற வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி தம் அறிவாற்றல் மூலம் வரலாற்றுத் தெளிவினை ஊட்டிய வழிகாட்டி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவைப்போற்றும் இந்நாளில் அவர் கற்பித்த மொழியையும், காட்டிய வழியையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைக் காக்கவும் உறுதியேற்போம்!
சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.