< Back
மாநில செய்திகள்
பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் உரிமை உண்டு -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் உரிமை உண்டு -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
9 March 2023 4:12 AM IST

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட கோர்ட்டு, இந்து வாரிசு உரிமை சட்டப்படி, குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளதாகக்கூறி சொத்தில் பங்கு கொடுக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்களான சரவணன், வெங்கடாச்சலம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.

உரிமை இல்லை

அப்போது மனுதாரர்கள் தரப்பில், ''இந்து வாரிசுரிமை சட்டத்தில், குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உண்டு என்று கூறப்படவில்லை. சமபங்கு பெற இந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உரிமை இல்லை. எனவே, இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கொடுக்கத் தேவையில்லை. சேலம் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. ஆகவே இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

வேதனைக்கு உரியது

அதேநேரம், அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் பழங்குடியின (எஸ்.டி.) பெண்களுக்கு குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வேதனைக்குரியது.

எனவே எஸ்.டி. பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிட தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்