பெரம்பலூர்
பழங்குடியின நரிக்குறவர் மக்கள் பாரிவேந்தர் எம்.பி. தலைமையில் கலெக்டரிடம் மனு
|கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை திரும்ப வழங்கக்கோரி பழங்குடியின நரிக்குறவர் மக்கள் பாரிவேந்தர் எம்.பி. தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் வசித்து வரும் பழங்குடியின நரிக்குறவர் மக்கள் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்.பி. தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது நரிக்குறவர்கள் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்து எறையூரில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். பின்னர் அரசு எங்களுக்கு ஏக்கர் கணக்கில் கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தோம். தற்போதைய தமிழக அரசு எங்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து அந்த நிலத்தில் சிப்காட் தொழிற்சாலை பூங்கா அமைப்பதாக கூறி கையெழுத்து வாங்கி நிலத்தை கைப்பற்றினார்கள். ஆனால் மீதமுள்ள நிலத்தை திரும்ப தருவதாக கூறியும் இதுவரை திரும்ப தரவில்லை. எனவே விவசாயம் செய்த நிலத்தை திரும்ப பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் பாரிவேந்தர் எம்.பி. மற்றும் நரிக்குறவா் மக்களில் சிலர் சென்று மாவட்ட கலெக்டர் கற்பகத்தை சந்தித்து இது தொடர்பாக ஒரு மனுவினை கொடுத்தனர். பின்னர் பாரிவேந்தர் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்டந்தோறும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இந்திய ஜனநாயக கட்சி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து 3 மாதத்திற்கு பிறகு அறிவிப்போம். தோ்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. கூறியது. ஆனால் தற்போது தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று கூறுவது தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததை காட்டுகிறது என்றார்.