புதுக்கோட்டை
கறம்பக்குடியில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்
|கறம்பக்குடியில் 94 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படும் என அச்சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
நரிக்குறவர் குடியிருப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அம்புக்கோவில் சாலையில் 42 நரிக்குறவர் குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இச்சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் சார்பில் மனைப்பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் பறவைகள், விலங்குகளை வேட்டையாடி வாழ்க்கையை நடத்தி வந்தனர். தற்போது பாசி, பவளம், பலூன் விற்பனை செய்வது, வயல்களில் எலிகளை கிட்டி வைத்து பிடிப்பது போன்றவற்றை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இச்சமூகத்தினருக்கு போதிய கல்வி அறிவு இல்லை. அறிவொளி இயக்கத்தின் மூலம் ஓரளவு கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தொடங்கினர். தற்போது இந்த குடியிருப்பில் 10-ம் வகுப்புக்கு மேல் படித்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 30-க்கும் அதிகமானோர் பள்ளிகளில் படித்து வருகின்றனர். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அடித்தட்டு நிலையில் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தினருக்குஎம்.பி.சி. (மிகவும் பிற்பட்டோர்) சாதி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் இந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்ப்பில் முன்னுரிமை இல்லாத நிலையில் இருந்து வந்தனர்.
94 பேருக்கு சான்றிதழ்
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து உத்தரவிட்டது. இருப்பினும் கறம்பக்குடியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. இதை அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடியில் வசிக்கும் நரிகுறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த வாரம் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் 94 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 94 பேருக்கு புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை வழங்கினார். இதனால் கறம்பக்குடியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் வாழ்க்கைத்தரம் உயரும் என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
உரிய முன்னுரிமை கிடைக்கும்
சத்யா:- நான் பிளஸ்-2 வரை படித்து உள்ளேன். எம்.பி.சி. சாதி சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது. இதனால் எங்களுடன் மேம்பட்ட சமூகத்தினருடன் என் போன்றவர்களால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போட்டியிட முடியவில்லை. சமூக சூழல் மேல் படிப்பையும் தொடர அனுமதிக்க வில்லை. தற்போது பழங்குடியினருக்கான சாதி சான்று வழங்கப்பட்டுள்ளதால் உரிய முன்னுரிமை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளேன்.
அதிகாரிகளுக்கு நன்றி
சரண்யா:- அனை வருக்கும் கல்வித் திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற வற்றால் தற்போது எங்கள் பகுதி குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கி உள்ளனர். சாதி சான்று வழங்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உரிய காலத்தில் எங்களுக்கு சான்று வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
குழந்தைகளை படிக்கவைப்பது எங்களது பணி
மாதவன்:- எங்கள் சமூகத்தை சேர்ந்த பார்வை குறைபாடு உடைய ஒருவர் மட்டும் ஆசிரியர் பணியில் உள்ளார். எங்கள் நிலை மற்றும் சமூக சூழ்நிலை அறிந்து, தேடி வந்து விண்ணப்பங்களை பெற்று பழங்குடியினர் சாதி சான்று வழங்கிய அதிகாரிகளை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். எங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது எங்களது முதல் பணியாக இருக்கும். இதுவரை பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை பெற இப்பகுதியில் ஆட்கள் இல்லாததால் அந்த சலுகையை மற்ற சமூகத்தினர் பெற்று வந்தனர். வருங்காலங்களில் இந்த உரிமையை நாங்கள் பெறுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.