தேனி
அரசு நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்துதீயணைப்பு வீரர்களுக்கு கொலை மிரட்டல்2 பேர் மீது வழக்கு
|தேனியில் அரசு நிலத்துக்குள் நுழைந்து தீயணைப்பு வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில், தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானது. இதுகுறித்து தீயணைப்பு துறை சார்பில் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே, தனிநபர் ஒருவர் அந்த நிலத்துக்கு உரிமை கோரியதாக கூறப்படுகிறது.
இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் நிலம் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடம் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய அரசு நிலம் என்று உறுதி செய்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நிலத்தில் சிலர் கட்டிடம் கட்டுவதற்காக பேவர்பிளாக் கற்களை கொண்டு வந்து இறக்கினர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். அப்போது அவர்கள், தீயணைப்பு துறையினரை பார்த்து அது தங்கள் இடம் என்றும், உள்ளே வரக்கூடாது என்று கூறியும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் (வயது 49) தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக அரண்மனைப்புதூரை சேர்ந்த ராஜேந்திரன், குணசேகரன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.