கரூர்
கனமழைக்கு சாலைகளில் விழுந்த மரங்கள்
|கரூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
பரவலாக மழை
கரூரில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 29-ந்தேதி இரவு பரவலாக மழை பெய்தது. இதேபோல் நேற்றுமுன்தினம் இரவும் கரூர், தாந்தோணிமலை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த சுமார் 20 ஆண்டுகள் பழமையான வாகை மரத்தின் ஒருபகுதி மட்டும் சாலையில் முறிந்து விழுந்தது.
இதனால் அரசு கலைக்கல்லூரி வழியாக பொன்நகர் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் அருகில் இருந்த மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. கனரக வாகனங்கள் வேறுபாதையில் மாற்றிவிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து முறிந்து விழுந்த மரத்தினை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
மழையளவு
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில் வருமாறு) :- கரூர்-13, அரவக்குறிச்சி-14.6, அணைப்பாளையம்-62, க.பரமத்தி-9.2, தோகைமலை-6, கிருஷ்ணராயபுரம்-12, மாயனூர்-42, பஞ்சப்பட்டி-14, கடவூர்-10.2, பாலவிடுதி-24.2, மைலம்பட்டி-15, மொத்தம்-222.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சபட்டியிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள தரகம்பட்டி- குளித்தலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.