< Back
மாநில செய்திகள்
10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
நீலகிரி
மாநில செய்திகள்

10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

தினத்தந்தி
|
22 July 2023 2:15 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடுங்குளிருடன் லேசான மழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும்.

ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை. கூடலூர், பந்தலூர் பகுதியில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

மரங்கள் விழுந்தன

இது தவிர பார்சன்ஸ் வேலி, குருத்துக்குளி, நஞ்சநாடு, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட 7 இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் அன்பகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.அதன்பிறகு போக்குவரத்து சீரானது. கடுங்குளிரால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். மேலும் ஆங்காங்கே சாலையோரங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தேவாலா போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மரத்தை அறுத்து அகற்றினர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் மதியம் 2.30 மணிக்கு கூடலூரில் இருந்து கேரளா செல்லும் நெடுஞ்சாலையில் நந்தட்டி என்ற இடத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்