கோயம்புத்தூர்
பரம்பிக்குளம் சாலையில் மரம் விழுந்தது
|வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பரம்பிக்குளம் சாலையில் மரம் விழுந்தது.
பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு, ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில் வனப்பகுதியில் மழைக்கு இடையே சூறாவளி காற்று வீசியதால் பரம்பிக்குளம் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு 30 மி.மீ., பரம்பிக்குளம் 20 மி.மீ., ஆழியாறு 1.6 மி.மீ., வால்பாறை 41 மி.மீ., மேல்நீராறு 65 மி.மீ, கீழ்நீராறு 61 மி.மீ., காடம்பாறை 7 மி.மீ, சர்க்கார்பதி 25 மி.மீ., மணக்கடவு 4 மி.மீ., தூணக்கடவு 33 மி.மீ., பெருவாரிபள்ளம் 47 மி.மீ., அப்பர் ஆழியாறு 4 மி.மீ., பொள்ளாச்சி 5 மி.மீ. என மழை பதிவானது.