கரூர்
வடமாநில தொழிலாளர்கள் 4 பேருக்கு சிகிச்சை: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி
|பரமத்தி வேலூரில் தீக்காயம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
வடமாநில தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.கடந்த 13-ந்தேதி இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அமைச்சர் நேரில் ஆறுதல்
நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் சிலர் அங்கு வந்து மண்எண்ணெயை தூங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த ராகேஷ் என்ற ரோகி (வயது 19), சுகிலாம் (28), யஸ்வந்த் (18), கோகுல் (23) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 வடமாநில தொழிலாளர்களையும் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பின்னர் வெளியே வந்த அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தீக்காயம் அடைந்த 4 பேருக்கும் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், எந்த மாதிரியான மருந்துகள் தேவைப்படுகிறது அவை அனைத்தையும் பெற்று உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையின் அடிப்படையில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முதல்-அமைச்சர் கவனத்திற்கு இதை எடுத்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் உடனிருந்தனர்.