வரும் 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு
|தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 4-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வட்டார வள மைய ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வினை நடத்த அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர்கள் இதன்மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி இடங்களில் நிரப்பப்படுகிறார்கள்.
ஜனவரி மாதம் 7-ந்தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர். ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இத்தேர்வினை எழுத 41,485 விண்ணப்பித்து இருந்தனர். தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முழு வீச்சில் செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 130 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.