பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் - 18 ஆயிரம் பேருக்கு அபராதம்
|சென்னையில் இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18,035 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மாதம் இருசக்கர வாகனங்களில் சென்று சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் இருந்தது தெரிய வந்தது.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் ஓட்டுநர் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இதனை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்தது. இந்த விதிமுறைகள் கடந்த மே 23-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.21.98 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.