விழுப்புரம்
கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் அல்லல்படும் பயணிகள்
|கோலியனூர் கூட்டுசாலையில் நிழற்குடை இல்லாததால் வெட்டவெளியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கோலியனூர் அருகே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் 4 வழிச்சாலை சந்திக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக கோலியனூர் கூட்டுசாலை திகழ்கிறது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் கோலியனூர் கூட்டுசாலையில் இருந்து பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு ஏராளமான பொதுமக்கள், பஸ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் கோலியனூர் கூட்டுசாலைக்கு வருகின்றனர். அதுபோல் கோலியனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் விழுப்புரத்தில் படித்து வருவதால் அவர்கள் பஸ் ஏறுவதற்காக கோலியனூர் கூட்டுசாலைக்கு வருகின்றனர்.
பயணியர் நிழற்குடை
மேலும் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், கோலியனூர் கூட்டுசாலை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. இதனால் இங்குள்ள கூட்டுசாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதோடு மக்கள் நடமாட்டமும் மிகுந்து காணப்படுகிறது.
இவ்வாறு இருக்க இங்குள்ள கூட்டுசாலையில் இருந்து பஸ் ஏறிச்செல்வதற்காக தினமும் வரும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக பயணியர் நிழற்குடை வசதி இல்லாததால் தினந்தோறும் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் அங்குள்ள சாலையோரத்தில் கொளுத்தும் வெயிலில்பல மணி நேரம் கால்கடுக்க காத்து நிற்க வேண்டியுள்ளது. இவ்வாறு காத்து நிற்கும்போது சில சமயங்களில் வெயில் கொடுமையால் சிலர் மயங்கி கீழே விழும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
பொதுமக்கள் அவதி
மேலும் மழைக்காலங்களில் மழைக்காக ஒதுங்க அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளை நோக்கி ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இது தவிர குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் போதிய அளவிலான தெருமின் விளக்குகளும் இல்லாததால் இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
எனவே மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் கோலியனூர் கூட்டுசாலை பகுதியில் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு பயணியர் நிழற்குடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.