கன்னியாகுமரி
வேன் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி அண்ணன், தங்கை பலி
|பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அண்ணன், தங்கை மீது வேன் மோதியதில் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில் இருவரும் பலியானார்கள்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அண்ணன், தங்கை மீது வேன் மோதியதில் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில் இருவரும் பலியானார்கள்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அண்ணன், தங்கை
பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் பணிக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26). ஐ.டி.ஐ. முடித்த இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் குடோன் பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். பெயிண்டரான இவருடைய மகள் ராஜேஸ்வரி (22) நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்தார்.
ராஜேஸ்வரியும், மணிகண்டனும் அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அதாவது மணிகண்டனின் சித்தி மகள் ராஜேஸ்வரி ஆவார். தினமும் வேலைக்கு செல்லும் போது மணிகண்டன், ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று காலையில் 8.40 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டனர்.
வேன் மோதியது
திட்டுவிளை ரோட்டில் துவரங்காடு பகுதியை சென்றடைந்த போது ஆலங்குளத்தில் இருந்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா செல்ல பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்தது.
இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து மணிகண்டனும், ராஜேஸ்வரியும் கீழே விழுந்தனர்.
2 பேர் பலி
அந்த சமயத்தில் பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் இருவரும் சிக்கி கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் லாரி ஏறி இறங்கியதில் தலை நசுங்கி ராஜேஸ்வரி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வயிற்று பகுதியில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார்.
உடனே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த டிரைவரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்பவரை கைது செய்தனர். விபத்தில் அண்ணன், தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.