< Back
மாநில செய்திகள்
விதவை பெண்ணுக்கு உடனடியாக நிரந்தர பணி வழங்கிய போக்குவரத்து கழக அதிகாரிகள்
மதுரை
மாநில செய்திகள்

விதவை பெண்ணுக்கு உடனடியாக நிரந்தர பணி வழங்கிய போக்குவரத்து கழக அதிகாரிகள்

தினத்தந்தி
|
30 Sept 2023 12:54 AM IST

கடும் நடவடிக்கை என எச்சரித்ததால் விதவை பெண்ணுக்கு உடனடியாக நிரந்தர பணிக்கான ஆணையை ஐகோர்ட்டிலேயே போக்குவரத்து கழக அதிகாரிகள் வழங்கினார்கள். அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் வன்மம் காட்டக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

மதுரை,

கடும் நடவடிக்கை என எச்சரித்ததால் விதவை பெண்ணுக்கு உடனடியாக நிரந்தர பணிக்கான ஆணையை ஐகோர்ட்டிலேயே போக்குவரத்து கழக அதிகாரிகள் வழங்கினார்கள். அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் வன்மம் காட்டக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

வாரிசு வேலை

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் கருப்பையா. கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி உயிரிழந்தார். இந்தநிலையில் எனது கணவருக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் மற்றும் வாரிசு அடிப்படையில் பணி வழங்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, எனது கணவர் 427 நாட்கள் பணியாற்றி உள்ளார். அவரை நிரந்தர பணியாளராகக் கருதி, அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும். மேலும் எனக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து பரிசீலித்து 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

உடனடியாக பணி ஆணை

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு 2 நாட்களில் வாரிசு அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜரானார்கள்.

அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரருக்கு தினக்கூலி அடிப்படையில்தான் பணி வழங்க முடியும் என தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இப்போதே மனுதாரருக்கு நிரந்தர பணிக்கான ஆணையை வழங்க வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் மீது இந்த கோர்ட்டு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதையடுத்து அமிர்தவள்ளிக்கு அங்கேயே நிரந்தர பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அதன் காரணமாக வாரிசு அடிப்படையில் பணி உத்தரவை பெற்றவர்கள் மீது அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. எந்த வன்மத்தையும் காட்டக்கூடாது என எச்சரித்து, இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்