< Back
மாநில செய்திகள்
வேளாண் அதிகாரியிடம் சங்கிலி பறித்த திருநங்கைகள்
திருச்சி
மாநில செய்திகள்

வேளாண் அதிகாரியிடம் சங்கிலி பறித்த திருநங்கைகள்

தினத்தந்தி
|
2 May 2023 1:35 AM IST

வேளாண் அதிகாரியிடம் சங்கிலி பறித்த திருநங்கைகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கிலியை பறித்தனர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த சாம்சன் (43), வேளாண்மை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய துறை ரீதியான பணியை விழுப்புரத்தில் முடித்துவிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு கோவை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த 3 திருநங்கைகள் சாம்சன் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடித்து, சங்கிலியை மீட்டனர். ஆனால் அந்த திருநங்கைகள் தப்பி ஓடினர். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

பிணமாக கிடந்த தொழிலாளி

* திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை(வயது 60). ரெயில்வே ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் உடல் அழுகிய நிலையில் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த சங்கிலிமுத்துவின் மகள் ஜெயப்பிரியா(16). இவர் சம்பவத்தன்று தில்லைநகர் தூக்குமேடைத்தெருவில் உள்ள வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(52). இவரிடம் உறையூர் மேலபாண்டமங்கலத்தை சேர்ந்த தர்மராஜ் விமல் என்ற செல்வகுமார் (27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை

*மண்ணச்சநல்லூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் சரவணன் (வயது 28). இவர் திருச்சி தென்னூரில் உள்ள மருத்துவ ஏஜென்சி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 பேருக்கு கொரோனா

*திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 12 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். தற்போது வரை திருச்சி மாவட்டத்தில் 66 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்