திருநெல்வேலி
ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த திருநங்கை
|நெல்லையில் ரெயில் தண்டவாளத்தில் திருநங்கை பிணமாக கிடந்தார்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் லட்சுமிபுரம் உள்ளது. இங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து, நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியதாஸ், முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் சுடிதார் அணிந்திருந்தார். மேலும் அவருடைய வலது கையில் பேச்சிமுத்து என்றும், இடது கையில் எம்.எஸ்.கே. என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொன்று வீசப்பட்டாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.