< Back
மாநில செய்திகள்
குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல்
விருதுநகர்
மாநில செய்திகள்

குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:41 AM IST

காரியாபட்டியில் குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த திருநங்கைகள் கடந்த 7 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் காரியாபட்டி தாசில்தார் ஆகியோரிடம் தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.சக மனிதர்களை போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நேற்று 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.கடந்த 7 வருடமாக இவ்வாறு தான் சொல்கிறீர்கள் என ஆத்திரமடைந்த திருநங்கைகள் தீடீரென காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்து வந்த காரியாபட்டி போலீசார் திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

பின்னர் காரியாபட்டி தாசில்தார் சுப்பிரமணியம், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு வார காலத்தில் புறம் போக்கு இடங்களை தேர்வு செய்யப்பட்டு இடம் வழங்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்