சென்னை
தாம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது - தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
|தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் சேதமானது.
சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி தாமஸ் தெருவில் 18 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய மின்வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அருகில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை டிரான்ஸ்பார்மர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதமான நிலையில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரங்களில் தீ பிடித்து வெடித்து சிதறியது.
இதனால் பதறி போன குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியிருப்புவாசிகள் விபத்து குறித்து தெரிவிக்கையில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் என்ற அச்சத்தில் நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எனவே மீண்டும் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதிப்பு இல்லாத இடத்தில் டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.