திருச்சி
சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம்
|சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தற்போது மாவட்ட குற்றப்பிரிவு-2 என்ற பெயரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஆல்பர்ட் கடந்த மாதம் குற்றவழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் பெயரை நீக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் துறைரீதியாக விசாரணை நடத்தினார். அப்போது, மாவட்ட குற்றப்பிரிவு-2-ல் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உடந்தையாக அங்கு பணியாற்றிய பெண் போலீஸ் ஏட்டு ஹேமாகேத்தரின் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், மாவட்ட குற்றப்பிரிவு-2-ல் பணியாற்றிய போலீசார் அனைவரும், புகார்தாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மொத்தமாக பணம் வாங்கி பங்கு பிரித்து வந்தது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் ரகசிய விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு-2-ல் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் கோதண்டபாணி, பெரியசாமி, போலீஸ் ஏட்டு கவிதா, மற்றொரு கவிதா, குமரேசன், வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.